உசிலம்பட்டி அருகே பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
உசிலம்பட்டி அருகே பெண் போலீஸ் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர், முத்துவாளன் (வயது 40). அவருடைய மனைவி அமுதா (35). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.
தற்போது மாற்று பணியாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் முத்துவாளன், ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர்களுக்கு ஜான்சி (15) என்ற மகளும், அன்பு (14) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்து அமுதா காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அமுதா, ஒரு அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை முத்துவாளன் எழுந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் போலீஸ் அமுதா தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.