மருதமலையில், நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு - காப்பாற்ற முயன்ற காவலாளியும் உயிரிழந்த பரிதாபம்
மருதமலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காவலாளியும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடவள்ளி,
கோவையை அடுத்த மருதமலை அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் அன்பு செல்வன் (வயது 17). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால், அவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை ஓட்டலில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக தனது நண்பர்கள் 5 பேருடன் சென்றார்.
25 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 7 அடி ஆழம் கொண்ட அந்த நீச்சல் குளத்தில் 3½ அடி ஆழம், 4½ அடி ஆழம், 5½ அடி ஆழம் என 3 பகுதிகளாக பிரித்து, அங்கு தடுப்பு போடப்பட்டு இருக்கிறது. இதில் 5½ அடி ஆழ பகுதிபிரிவில் அதிகபட்சமாக 7 அடி வரை ஆழம் உண்டு.
நீச்சல் குளத்தில் 4½ அடி ஆழம் உள்ள பகுதியில் அன்புசெல்வன், சுதிர் ஆகியோர் குளித்துக்கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் 5½ அடி ஆழம் கொண்ட பகுதிக்கு சென்று ‘டைவ்’ அடித்து உள்ளே குதித்தனர்.
அப்போது 2 பேரும் 7 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்த பகுதிக்கு சென்றனர். இதில் சுதிருக்கு ஓரளவுக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் மெதுவாக நீந்தி கரையேறினார். ஆனால் அன்பு செல்வனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அலறினார்கள்.
உடனே அங்கு நின்ற காவலாளி தேவராஜன் (58) என்பவர் அங்கு ஓடி வந்து நீச்சல் குளத்துக்குள் குதித்து அன்பு செல்வனை காப்பாற்ற முயன்றார். அவருக்கு நீச்சல் நன்றாக தெரியும் என்றாலும், அன்புசெல்வன், தேவராஜனை கட்டிப்பிடித்துக்கொண்டதால், அவரால் நீந்தி வெளியேற முடியவில்லை, அவரால் அன்புசெல்வனையும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அங்கு இருந்தவர்களிடம் கூறினார்கள். அவர்கள் ஓடி வந்து தண்ணீருக்குள் மூழ்கியவர் களை மீட்டு வெளியேகொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மனோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த நீச்சல் குளம் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மாணவர் உள்பட 2 பேர் பலியான இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.150 கட்டணமாக பெறப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அதை உடனடியாக மூட சோமையம்பாளையம் பேரூராட்சிக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அத்துடன் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, நீச்சல் குள மேற்பார்வையாளர் நடராஜன் (60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்பு செல்வனை காப்பாற்ற உள்ளே குதித்த தேவராஜன், வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர். அவர் அங்கு வேலையில் சேர்ந்து 10 நாட்கள்தான் ஆகிறது. அவருக்கு புஷ்பா என்ற மனைவியும், சவுந்தர்ராஜன் (32) என்ற மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story