சேலம் அருகே கார் மோதி சிறுவன் பலி பெற்றோர் கண்முன்னே பரிதாபம்


சேலம் அருகே கார் மோதி சிறுவன் பலி பெற்றோர் கண்முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 26 March 2019 3:15 AM IST (Updated: 26 March 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே கார் மோதியதில் பெற்றோர் கண்முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் அருகே உள்ள தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 36). இவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா(32). இவர்களுக்கு கோகுல்(10), தீபன்(7) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் தீபன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

ரமேஷ் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் இரவில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். காரிப்பட்டி போலீஸ் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மோட்டார் சைக்கிளில் இருந்து ரமேஷ் உள்பட அனைவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த தீபன் சம்பவ இடத்திலேயே பெற்றோர் கண்முன்னே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மேலும் படுகாயம் அடைந்த ரமேஷ், சசிகலா, கோகுல் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story