விருத்தாசலம் அருகே, வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
விருத்தாசலம் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கீழப்பாளையூர் காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ் மகன் அருள்பாண்டியன்(வயது 21). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள மணிமுக்தாற்றங்கரையில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பூவரசன்(19) உள்பட சிலருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அருள்பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. மேலும் கத்தி வெட்டில் காயமடைந்த பூவரசனுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூவரசன் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நானும், எனது நண்பர்களான அருள்பாண்டியன், செல்வராசு மகன் செல்வகணபதி, விஸ்வநாதன் மகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் மணிமுக்தாற்றங்கரையில் உள்ள புளியமரத்தடியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் ஊர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் அருண்குமார்(22)ராமலிங்கம் மகன் ஜெயபிரகாஷ்(19) ஆகிய இருவரும் டாஸ்மாக் கடையில் மதுவாங்கிக்கொண்டு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் இருக்கும் ஆலமரத்தடிக்கு சென்றனர்.
இந்த நிலையில் காலனி பகுதியை சேர்ந்த காசி என்பவர் அங்கு கிடந்த காலி மதுபாட்டில்களை பொறுக்கிக்கொண்டு ஆலமரத்தடிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த தேன்கூடு கலைக்கப்பட்டு தேனீக்கள் காசியை கொட்டியது.இதனால் காசி அங்கிருந்து எங்களை நோக்கி ஓடிவந்தார். இதையடுத்து அவரை அழைத்து சென்று வீட்டில் விட்டு விட்டு வந்தோம். மேலும் ஆலமரத்தடிக்கு சென்ற ஜெயபிரகாஷ், அருண்குமார் ஆகியோர் தான் தேன்கூட்டை கலைத்து விட்டு இருப்பார்கள் என்று நினைத்து, இதுபற்றி ஊர்பகுதியை சேர்ந்த அழகுமுத்து மகன் ஆனந்தனிடம் போனில் தகவல் கூறினேன்.
பின்னர் பாலமுருகன் மகன் பாலாஜி (19), குமாரசாமி மகன் கவியரசன்(20), ஆனந்தன், ஜெயபிரகாஷ், அருண்குமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து வந்து எங்களை ஆபாசமாக திட்டினார்கள்.
அப்போது பாலாஜி தனது கையில் வைத்திருந்த கத்தியால் என்னை நோக்கி வீசினார். அதில் எனது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. மேலும் ஜெயப்பிரகாஷ் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் என்னை தலையில் அடிக்க வந்தார். அதை தடுக்க வந்த அருள்பாண்டியனின் தலையில் பீர்பாட்டில் பட்டு அவர் காயமடைந்தார்.அப்போது பாலாஜி கத்தியை எடுத்து அருள்பாண்டியனை குத்தினார். எங்களுடன் இருந்த செல்வகணபதியும், கிருஷ்ணகுமாரும் சத்தம் போட்ட உடன் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் காயமடைந்த என்னையும் அருள்பாண்டியனையும் கம்மாபுரம் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு அருள்பாண்டியன் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
பூவரசனின் புகாரின் அடிப்படையில், கீழப்பாளையூரை சேர்ந்த பாலாஜி, கவியரசன், ஜெயபிரகாஷ், ஆனந்தன், அருண்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாலாஜி, கவியரசன், ஜெயபிரகாஷ், அருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனந்தனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story