7 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தது நிதின் கட்காரி, அசோக் சவான், பிரகாஷ் அம்பேத்கர் மனுதாக்கல்


7 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தது நிதின் கட்காரி, அசோக் சவான், பிரகாஷ் அம்பேத்கர் மனுதாக்கல்
x
தினத்தந்தி 25 March 2019 10:15 PM GMT (Updated: 25 March 2019 10:06 PM GMT)

மராட்டியத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தது. நிதின் கட்காரி, அசோக் சவான், பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மும்பை, 

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி- சிமூர், சந்திராப்பூர், யவத்மால்- வாசிம் ஆகிய 7 தொகுதிகளில் முதல் கட்டமாக ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 18-ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

எனவே 7 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் மட்டுமின்றி சிறு கட்சி வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இதனால் நேற்று 7 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற கலெக்டர் அலுவலகங்களில் பரபரப்பு நிலவியது. கடைசி நாள் என்பதால் எல்லா இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதில், நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நட்சத்திர வேட்பாளரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மின்சார துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே மற்றும் குடும்பத்தினரும் வந்து இருந்தனர். நிதின் கட்காரி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் விலாஸ் முத்தேம்வாரை 2.84 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார்.

இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன். கடந்த 5 ஆண்டில் மோடி அரசு நிறைவேற்றிய திட்டங்களால் மக்களிடம் எங்களுக்கு நல்ல பெயர் உள்ளது. எங்கள் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதை விட அதிகமாக செய்து உள்ளது. உங்களின் அன்பும், ஆதரவும் எங்களின் மிகப்பெரிய பலம்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், நிதின்கட்காரி நாக்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவார். மராட்டியத்தில் அவர் சாதனைப்படைப்பார். மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 45 இடங்களில் வெற்றி பெறும், என்றார்.

நாக்பூரில் நிதின்கட்காரியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நானா பட்டோலேவேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது குறித்து நானா பட்டோலே கூறுகையில், ராம்டெக் மற்றும் நாக்பூர் தொகுதிகள் காங்கிரசின் கோட்டை, நிதின் கட்காரியை தோற்கடிப்பேன், என்றார்.

ராம்டெக் தொகுதியில் தற்போதைய எம்.பி.யும், சிவசேனாவை சேர்ந்தவருமான கிருபால் துமானே வேட்பு மனுதாக்கல் செய்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நாந்தெட் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தேசியவாத காங்கிரசை சேர்ந்த கமல் கிஷோர் கடம் சென்று இருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அசோக் சவான் கூறும்போது:-

விவசாயிகள், மாணவர்கள், வேலையில்லாதவர்கள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களும் அரசின் மீது விரக்தியில் உள்ளனர். பா.ஜனதா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

எனவே நிச்சயம் மாற்றம் ஏற்படும். நாடு முழுவதும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்ராவ் தாக்கரே யவத்மால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வன்ஜித் பகுஜன் அகாடி அமைப்பாளர் பிரகாஷ் அம்பேத்கர், எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஓவைசியுடன் வந்து சோலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டேயை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் சுஷில்குமார் ஷிண்டே இந்த தொகுதியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Next Story