அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கோபி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கோபி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-27T00:22:23+05:30)

அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கோபி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

கடத்தூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட கோபி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:–

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டமானது வெற்றிக்கூட்டமாக அமைந்து உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்த தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக இருக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களின் படி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயரும். அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் எல்லையில், தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. கோபி நகராட்சியில் ரூ.52 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பிளஸ்– 2 படித்து முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில், ‘இந்த தேர்தல் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கின்ற தேர்தல் ஆகும். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உழைத்து அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்,’ என்றார்.

வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறுகையில், ‘முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று அதன்படி செயல்படுவேன்,’ என்றார்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஈஸ்வரன் (பவானி), இ.எம்.ஆர்.ராஜா (அந்தியூர்), அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தம்பி என்கிற சுப்பிரமணியம், சிறுவலூர் மனோகரன், ஓ.எஸ்.மனோகரன், கோபி நகர செயலாளர் காளியப்பன் மற்றும் பா.ஜ.க. பா.ம.க., தே.மு.தி.க. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story