வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிச்சென்ற மாணவனுக்கு சூடு வைத்த ஆசிரியை கைது திருப்பூரில் பரபரப்பு


வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிச்சென்ற மாணவனுக்கு சூடு வைத்த ஆசிரியை கைது திருப்பூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 March 2019 11:30 PM GMT (Updated: 26 March 2019 7:08 PM GMT)

திருப்பூரில் வீட்டுப்பாடத்தை தவறாக எழுதி பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு மெழுகுவர்த்தியால் ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளியின் 9 வயது மகன் கோல்டன் நகரில் உள்ள பாரத் தொடக்கப்பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல மாணவன் தயாரானான். அப்போது அவனின் இரு கைகளிலும் தீக்காயம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர். உடனடியாக அவனிடம் விவரம் கேட்டனர்.

அப்போது அவன், பள்ளி ஆசிரியை தன்னை மெழுகுவர்த்தியால் சூடுவைத்ததாக பெற்றோரிடம் கூறினான். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் தனது மகனுடன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்து புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பள்ளியில் 4–ம் வகுப்பு ஆசிரியையாக உள்ள ரம்யா(வயது 22) அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் மாணவன், வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிக்கொண்டு நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் நோட்டுகளை வாங்கி பார்த்த ரம்யா, கோபத்தில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து, உருகிய மெழுகை மாணவனின் கைகளில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார், ஆசிரியை ரம்யா மீது சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். ரம்யா அந்த பள்ளி தாளாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சூடுவைத்ததால் காயம் அடைந்த மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டுப்பாடத்தை தவறாக எழுதி பள்ளிக்கு சென்ற மாணவனின் கையில் மெழுகுவர்த்தியால் பள்ளி ஆசிரியை சூடுவைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story