கடைசி நாளில் வேட்பாளர்கள் போட்டி போட்டு மனுதாக்கல்


கடைசி நாளில் வேட்பாளர்கள் போட்டி போட்டு மனுதாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 9:45 PM GMT (Updated: 26 March 2019 7:24 PM GMT)

கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுதாக்கல் செய்தனர். தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி நேற்று வட, தென் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் போட்டி போட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன், சென்னை செனாய் நகரில் உள்ள மத்திய துணை வட்டார ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பி.என்.ஸ்ரீதரிடம் மனுதாக்கல் செய்தார். அவருடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதேபோல், அ.ம.மு.க. கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் மனுதாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தென்சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அ.ம.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா, இந்திய குடியரசு கட்சி (ராம்தாஸ் அத்வாலே) உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். தென்சென்னை தொகுதியில் நேற்று ஒரே நாளில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜூக்கு, மாற்று வேட்பாளராக தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று ஒரே நாளில் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யும் அலுவலகங்களுக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. சரியாக 3 மணிக்கு தேர்தல் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு காலஅவகாசம் முடிந்துவிட்டது என்று தெரிவித்தார்.

அதன்பின்னர், மனுதாக்கல் செய்த அலுவலகங்களின் நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட்டன. 3 மணிக்கு முன்பு வந்த வேட்பாளர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, வரிசைப்படி அவர்களிடம் இருந்து மனுக்களை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பெற்றனர். 3 மணிக்கு பிறகும் சில வேட்பாளர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பியதையும் பார்க்க முடிந்தது.

Next Story