தென் மாநிலங்களில் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது - புவனகிரியில் திருமாவளவன் பேச்சு
தென் மாநிலங்களில் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது என்று புவனகிரியில் நடந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
புவனகிரி,
நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது திருமாவளவன் பேசியதாவது:-
இந்தியாவில் யார் பிரதமராக வர வேண்டும் என்பதை தமிழகம் தான் தீர்மானிக்க வேண்டும். சிதம்பரம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்று இந்த களத்தில் நான் நிற்கவில்லை. ஒட்டு மொத்த தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். 40 வேட்பாளர்களில் நானும் ஒருவன்.
புலவாமா தாக்குதலுக்கு பிறகு வட மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு மீண்டும் செல்வாக்கு உருவாகி உள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது. ஆனால் தென் மாநிலங்களில் மோடிக்கு எதிர்ப்பு அலைதான் வீசி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தருணத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டியது இரண்டு விஷயங்கள்தான். பணத்தை செலவழித்து வெற்றி பெற்று விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றன. அதனால் கோடி, கோடியாய் ரூபாயை கொட்டி இறைத்து வருகிறார்கள். எந்த தொகுதியிலும் அந்த கட்சி வேட்பாளர்களை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது. எப்படி கூட்டணி கட்சிகளை விலைக்கு வாங்கினார்களோ, அதைப்போலவே மக்களையும் விலைக்கு வாங்க முயற்சி செய்து வருகின்றனர். அதை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நான் பானை சின்னத்தில் போட்டியிடுகிறேன். நேற்று வேட்புமனு தாக்கல் செய்தேன். ஆரவாரம் இல்லாமல் ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டாமல் மிகவும் அமைதியாக, எளிமையான முறையில் ஒரு முன் மாதிரியாக வேட்பு மனு தாக்கல் செய்தேன்.
இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் வெளிப்படையாக கிராம அளவில் சாதாரணமாக உழைக்கும் பெண்களிடத்திலும் மோடிக்கு எதிரான அலை வீசுவதை காண முடிகிறது.
தமிழக அரசின் மீது உள்ள அதிருப்தியை காட்டிலும் மோடியின் மத்திய அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தை இல்லாமல் ஒழித்தது மோடி அரசு. விவசாயம் பொய்த்துப் போனதற்கு மோடி அரசின் நடவடிக்கைகள் தான் காரணம் என்பதை மக்கள் உணர்ந்து உள்ளனர். இதனால் சாதாரண மக்களிடத்திலும், உழைக்கின்ற மக்களிடத்திலும் மோடிக்கு எதிரான அலை வீசி வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல தென் மாநிலங்களிலும் மோடி மிகப்பெரிய சரிவை சந்திப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story