திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 22 பேர் வேட்பு மனு தாக்கல்


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 22 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 7:45 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் திருநாவுக்கரசர் ஆகியோர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் வேட்பாளரின் காரை மட்டும் போலீசார் உள்ளே செல்வதற்கு அனுமதித்தனர். மற்ற வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மதியம் 1.30 மணி அளவில் சாருபாலா தொண்டைமான் திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ். சிவராசுவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் மனோகரன் (திருச்சி வடக்கு), சீனிவாசன் (திருச்சி மாநகர்), பரணி கார்த்திகேயன் (புதுக்கோட்டை), எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் ஹசான் இமாம் ஆகியோர் முன்மொழிந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் சாருபாலா தொண்டைமான் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

சாருபாலா தொண்டைமான் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தங்களது கட்சி சார்பில் பொது சின்னம் ஒதுக்கும்படி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் கோர்ட்டு உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்திற்கான கடிதத்தை 29-ந்தேதிக்குள் வழங்குவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. சாருபாலா தொண்டைமானின் வேட்பு மனு சுயேச்சை மனுவாக ஏற்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் சாருபாலா தொண்டைமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘நான் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 முறைபோட்டியிட்டு இருக்கிறேன். தற்போது 3-வது முறையாக நிற்கிறேன். எனவே எனக்கு திருச்சி ஒன்றும் பிரச்சினை இல்லை. இந்த முறை மிகப்பெரிய வெற்றியை பெறுவேன். எங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்கப்பட போகிறது என்பதை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. எங்கள் சின்னமே துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தான். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்’ என்றார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வி. ஆனந்தராஜா நேற்று காலை தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் தாக்கல் செய்தார். அவரது மனுவை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ், ஷாஜிகுமார், ஆர்.எஸ்.எம். ராஜா, மனோகரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று மட்டும் 22 பேர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் ஆனந்தராஜா தவிர மற்ற அனைவரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆகும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது முறையாக தாக்கல் செய்யப்படாத விண்ணப்பங்கள், டெபாசிட் பணம் ரூ,25 ஆயிரம் கட்டாத வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Next Story