அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேச்சு


அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.-பா.ம.க.கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அரியலூர்,

சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பிரசார கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாநில துணை தலைவர் வைத்தி வரவேற்றார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. மு.க.ஸ்டாலின் என்னை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். எனது 40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் பல விமர்சனங்களை சந்தித்துள்ளேன். இந்த தொகுதியில், குரு இல்லாமல் நான் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இது. சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக நினைத்து, அனைவரும் கடுமையாக உழைத்து இந்த கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

டாக்டர் அம்பேத்கருக்கு இந்தியாவிலேயே அரியலூர் பகுதியில் தான் 7 சிலைகள் அமைக்கப்பட்டன. அவை அனைத்தையும் ஒரே நாளில் நான் திறந்துவைத்தேன். அழகாபுரம் கிராமத்தில் நடந்த கோவில் பிரச்சினையில், தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கு செல்ல பாடுபட்டேன். இந்த பகுதியில் உள்ள அனைவரும் சந்திரசேகருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அருணாசலம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல், த.மா.கா. மாவட்ட தலைவர் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. மாசிலாமணி, பா.ம.க. நிர்வாகிகள் சின்னதுரை, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரசேகர் நேற்று திருமானூர் ஒன்றிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். காலை 8 மணி அளவில் வாரணவாசி கிராமத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் கீழப்பழுவூர், மேலப்பழுவூர், அரண்மனைகுறிச்சி, அண்ணிமங்கலம், கரைவெட்டி உள்ளிட்ட 22 கிராமங்களில் நேற்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை கேட்டறிந்த அவர் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.

இதில் வேட்பாளருடன் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், திருமானூர் ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், பா.ம.க. அரியலூர் தொகுதி செயலாளர் பிரகாஷ் மற்றும் தே.மு.தி.க., பா.ஜனதா, த.மா.கா. போன்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு பிரசாரம் செய்தனர். 

Next Story