நெல்லையில் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை


நெல்லையில் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 26 March 2019 10:30 PM GMT (Updated: 26 March 2019 7:53 PM GMT)

நெல்லையில் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டினார்.

நெல்லை, 

நெல்லையில் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டினார்.

தி.மு.க. வேட்பாளர்

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஞான திரவியம் போட்டியிடுகிறார். அவர் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்கு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், லட்சுமணன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கிரகாம்பெல் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர். வேட்பாளர் ஞானதிரவியம் தேர்தல் பிரசாரம் மற்றும் ஊர், ஊராக சென்று வாக்கு சேகரிப்பது தொடர்பாக பேசினார்.

தேர்தல் பிரசாரம்

கூட்டத்தில், நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சட்டசபை தொகுதி வாரியாக பிரசார பயண திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. எந்தெந்த தேதியில் எந்த ஒன்றிய பகுதிக்கு சென்று ஓட்டு சேகரிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வேட்பாளர் ஞான திரவியம், நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Next Story