நயன்தாரா விவகாரத்தை வைத்து ராதாரவியை பழிதீர்த்துவிட்டனர் தி.மு.க. மீது அமைச்சர் குற்றச்சாட்டு


நயன்தாரா விவகாரத்தை வைத்து ராதாரவியை பழிதீர்த்துவிட்டனர் தி.மு.க. மீது அமைச்சர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 7:57 PM GMT)

நடிகை நயன்தாரா விவகாரத்தை வைத்து ராதாரவியை தி.மு.க. பழிதீர்த்துவிட்டது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.ம.மு.க.வில் இருப்போர் தாய் கழகத்தில் வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு அமைப்பே கிடையாது. தினகரனின் செயல் அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்குகூட பிடிக்கவில்லை. அவரது முயற்சி வெற்றி பெறாது. பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. தி.மு.க., அ.ம.மு.க.வினர் தான் பணம் கொடுக்கிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அ.தி.மு.க. முற்றிலும் எதிர்க்கிறது.

தமிழ்நாட்டில் கமல்ஹாசனுக்கு வேலை இல்லை. அவர் ஆரம்பித்த கட்சி சிரிப்பு படம் போன்றது.

கமல்ஹாசன் தோல்வி பயத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை. ரஜினியை போல் கமல்ஹாசன் முடிவு எடுத்திருக்க வேண்டும். ராதாரவி தி.மு.க.வில் சேர்ந்ததே தவறு. நயன்தாரா விவகாரத்தை வைத்து ராதாரவியை தி.மு.க. பழிதீர்த்துவிட்டது.

சாத்தூரில் அவர் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘வன்முறை கட்சி என்றாலே அது தி.மு.க.தான். இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். நடுரோட்டில் போலீஸ் அதிகாரி வெட்டுபட்டு கிடந்தபோது தி.மு.க. அமைச்சர்கள் 2 பேர் வேடிக்கை பார்த்து சென்றதை யாரும் மறக்க முடியாது. கோடநாடு கொலை என்கிறார்கள். எதைச்செய்தாலும் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சொல்கிறார்கள். அவர் இரக்க குணம் உடையவர். வாழைக்குலையைக்கூட அவர் வெட்டமாட்டார். ஒரு விவசாயி, சாமானியன் நாட்டை ஆளக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சி நீடிக்கும்’’என்றார்.


Next Story