வாகன சோதனை: தேர்தல் பறக்கும் படையிடம் ரூ.6¾ லட்சம் சிக்கியது


வாகன சோதனை: தேர்தல் பறக்கும் படையிடம் ரூ.6¾ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 27 March 2019 3:30 AM IST (Updated: 27 March 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நடத்திய வாகன சோதனையில் ரூ.6¾ லட்சம் சிக்கியது.

தென்காசி, 

தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நடத்திய வாகன சோதனையில் ரூ.6¾ லட்சம் சிக்கியது.

தென்காசி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி அருகே இலஞ்சி சாலையில் தென்காசி சமூக நலத்திட்ட தாசில்தார் வெற்றிச்செல்வி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு கார், செங்கோட்டை பிரானூர் பகுதியை நோக்கி வேகமாக வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.5 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில், காரில் வந்தவர் புதுச்சேரி மாநிலம் சேதாரப்பட்டு திருசிடாம்பலம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ருக்கு மாங்கதன் என்பது தெரியவந்தது. தான் மரக்கடை வைத்துள்ளதாகவும், செங்கோட்டை பிரானூர் பகுதியில் உள்ள மர ஆலையில் இருந்து தன்னுடைய கடைக்கு மரம் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தென்காசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கல்லிடைக்குறிச்சி

இதே போல் கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாங்குளி மெயின் ரோட்டில் அம்பை தேர்தல் பறக்கும் படை தாசில்தார் பிரபாகர் அருள்செல்வன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 610 இருந்ததும், தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்த பரமசிவன் (வயது 61) என்பதும் தெரியவந்தது.

பலசரக்கு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பலசரக்கு விற்று வசூலான பணத்தை நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அம்பை தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சத்தியவல்லி, கூடுதல் துணை தாசில்தார் சீதாதேவி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story