தங்கும் விடுதிகளில் மதுபானம், பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்தால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தங்கும் விடுதிகளில் மதுபானம், பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் வழங்குவதை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் சரக பகுதிகளில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள்– போலீசார் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை புஸ்சி வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசிய போது அவர் கூறியதாவது:–
விடுதிகளில் தங்குவதற்கு வெளியூர் ஆட்கள் வந்தால் உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும். கட்சிக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. வாக்காளர்களுக்கு பணப் பரிமாற்றம் ஏதும் செய்யக்கூடாது. இதுபற்றி தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் மதுபானம், பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கக்கூடாது.
தேர்தல் விதிமுறைக்கு எதிராக யாரும் செயல்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதி அறைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும். கூடுதல் நபர்களை தங்க வைக்கக்கூடாது. தேர்தல் விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கும் விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.