ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்: ராகுல்காந்தி அறிவிப்பால் பா.ஜ.க.வுக்கு தோல்விபயம் நாராயணசாமி பேட்டி


ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்: ராகுல்காந்தி அறிவிப்பால் பா.ஜ.க.வுக்கு தோல்விபயம் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 26 March 2019 11:45 PM GMT (Updated: 26 March 2019 8:20 PM GMT)

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்ற ராகுல்காந்தியின் அறிவிப்பால் பாரதீய ஜனதாவுக்கு தோல்விபயம் வந்துவிட்டதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறு மக்கள்நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் பல கோடி இளைஞர்கள் தொழில்கல்வி படித்து இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தினை கொண்டுவந்து 100 நாட்கள் வேலை கட்டாயமாக வேலை கொடுத்தார்.

இதன் மூலம் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பினை பெற்றனர். அதுமட்டுமின்றி தகவல் பெறும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் கல்வி பெறும் சட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தார். சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் கொண்டுவந்தார்.

நாட்டில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் ராகுல்காந்தி கிராமப்புற ஏழைகள், அமைப்புசாரா தொழிலாளர்களை கருத்தில்கொண்டு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் உள்ள 5 கோடி குடும்பங்கள், அதாவது 25 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் இந்த தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் பாரதீய ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. நிதி மந்திரி அருண்ஜெட்லி இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா? என்று கேட்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்துவிட்டுதான் ராகுல்காந்தி இதை அறிவித்துள்ளார். போலியான வாக்குறுதிகளை காங்கிரஸ் எப்போதும் அளிக்காது. போலி வாக்குறுதிகளை அளிப்பதில் வல்லவர் பிரதமர் மோடிதான்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் செவிலியர் பணி, காவலர் பணி உள்ளிட்ட அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம் 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். முதல்–அமைச்சர், சபாநாயகர், அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். அவருக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் உள்ளது. அரசியலுக்கு இளைஞர்கள் வரலாம். ஆனால் மத்திய அரசிடம் கேட்டு பெறும் அனுபவமும், திறமையும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்குத்தான் உள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், வேட்பாளர் வைத்திலிங்கம், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் துணைத்தலைவர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story