சூலூரில் பட்டா வழங்க ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது


சூலூரில் பட்டா வழங்க ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் பட்டா வழங்க ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சூலூர், 

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பாலதண்டபாணி (வயது 63). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் நிலம் ஒன்று வாங்கி இருந்தார். இந்த நிலத்திற்கான பட்டா தண்டபாணி மற்றும் அவரது மனைவி பெயரில் கூட்டு பட்டாவாக உள்ளது. எனவே தனது பெயரில் தனிப்பட்டா வழங்கக்கோரி சூலூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்து இருந்தார்.

இங்கு குறிச்சி சுந்தராபுரத்தை சேர்ந்த வெங்கடாஜலபதி (50) சார் நில அளவையாளராக உள்ளார். அவரிடம் பாலதண்டபாணி பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அப்போது அவர் நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னால் அவ்வளவு தொகையை தர முடியாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வெங்கடாஜலபதி ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு சம்மதம் தெரிவித்த பாலதண்டபாணி நேற்று முன்தினம் அவரிடம் ரூ.1,000 லஞ்சமாக வழங்கியுள்ளார். மீதி தொகையை அடுத்த நாள் தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலதண்டபாணி கோவையில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் அளித்தனர்.

இந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட பாலதண்டபாணி நேற்று மதியம் சூலூர் தாலுகா அலுவலகத்தில் வெங்கடாஜலபதியை சந்தித்து ரூ.24 ஆயிரம் வழங்கினார். அதனை வெங்கடாஜலபதி வாங்கும் போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தாலுகா அலுவலகத்திற்குள் பொதுமக்கள் வருவதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. வெங்கடாஜலபதியின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பட்டா வழங்க ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் சூலூர் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story