நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 36 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்


நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 36 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 9:45 PM GMT (Updated: 26 March 2019 8:34 PM GMT)

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 36 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கடந்த 19-ந் தேதி தொடங்கி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பி.சாமிநாதன் கலெக்டர் ஆசியா மரியத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத்குமார், மாநில அமைப்பு செயலாளர் ரவிக்குமார், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஏ.பி.பழனிவேல், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் நல்லியப்பன் ஆகியோர் உடன் வந்து இருந்தனர்.

இதேபோல் மக்கள் நீதிமய்யம் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் நாமக்கல் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மணி, நாமக்கல் மத்திய மாவட்ட பகுதி பொறுப்பாளர் பரூக் ஆகியோர் உடன் வந்து இருந்தனர்.

உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மாணிக்கம், தேசிய மக்கள் கட்சி சார்பில் மல்லிகா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 16 பேர் உள்பட மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 36 வேட்பாளர்கள் 46 வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். இவர்களின் வேட்புமனுக்கள் இன்று (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்பட உள்ளன. வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் ஆகும்.

எனவே அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story