அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - உதயநிதி ஸ்டாலின் தாக்கு


அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - உதயநிதி ஸ்டாலின் தாக்கு
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் கோவை வெங்கிட்டாபுரம், பாப்பம்பட்டி பிரிவு பகுதிகளில் திறந்தவேனில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

இப்போது தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இது மு.க.ஸ்டாலின் ஆதரவு அலையாகும். கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி இந்த நாட்டை ஆட்சி செய்து குட்டிச்சுவராக மாற்றி விட்டார். 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது கருப்பு பணத்தை ஒழித்து, ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் அனைவருக்கும் நாமம் போட்டு விட்டார். அந்த நாமத்தை அவருக்கு இப்போது நாம் திருப்பி போட வேண்டும்.

நள்ளிரவில் அவர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்றார். ஆனால் அது ஒழிக்கப்பட்டதா? வங்கி, ஏ.டி.எம். வாசல்களில் பணத்துக்காக காத்திருந்தவர்களில் 150 பேர் இறந்த சம்பவங்கள் தான் அரங்கேறின.

நீட் தேர்வு பிரச்சினையால் தமிழகத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். ஆகவே தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்தால் நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்போம். விவசாய கடன்களை ரத்து செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம். மாணவ-மாணவிகளுக்கு இலவச ரெயில் பாஸ் வழங்குவோம். தற்போதுநான், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 6 நாடாளுமன்ற தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். அங்கு திரளான மக்கள், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக எழுச்சியுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இதே எழுச்சியுடன் ஏப்ரல் 18-ந் தேதி தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்து மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து செட்டிப்பாளையம், வடசித்தூர், நெகமம் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கரவாதிகளை ஒழிப்போம் என்று மோடி சொன்னார். 40 துணை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுதான் நாட்டின் பாதுகாப்பில் அவர்காட்டும் அக்கறையாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்ததால் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு உள்ளது. ஆகவே மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி 2 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பது தான் சாதனையாக உள்ளது. 100 நாட்கள் வேலை திட்டத்தை 40 நாட்களாக குறைத்து விட்டனர். ஆகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிப்போம்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கவுன்சிலராக இருக்க கூட தகுதி இல்லை என்று சொன்ன அன்புமணி ராமதாஸ், இப்போது அவருடன் முரண்பாடற்ற கூட்டணி அமைத்துள்ளார். ஆகவே இந்த தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தற்போது இந்த ஆட்சியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீண், ஒரு மாணவியை காரில் அழைத்து சென்றார். அப்போது காரில் இருந்து அந்த மாணவி தூக்கி வீசப்பட்டு இறந்தார். அதை விபத்து என்று போலீசார் வழக்கை முடித்து உள்ளனர்.

இப்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பலர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்துக்கு தொடர்பு உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி, அவர் எப்படி இறந்தார்? என்கிற உண்மையை வெளியே கொண்டு வருவோம். நாங்கள் செய்வதை சொல்வோம். சொல்வதை செய்வோம்.

நெசவாளர்கள் ஜி.எஸ்.டி.வரியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே அதில் இருந்து விலக்களிப்போம். நெகமத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கைத்தறி பூங்கா அமைக்கப்படும். விவசாயிகளுக்கு உரக்கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கட்சி தொண்டர்கள் உள்பட பொதுமக்களும் திரண்டுவந்து அவரது பேச்சை கேட்டனர்.

Next Story