‘குமரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்’ எச்.வசந்தகுமார் பேச்சு


‘குமரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்’ எச்.வசந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று நாகர்கோவிலில் நடந்த கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் எச்.வசந்தகுமார் கூறினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எச்.வசந்தகுமார் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் எச்.வசந்தகுமார் பேசும் போது கூறியதாவது:-

எனது சொந்த ஊர் அகஸ்தீஸ்வரம். இது அறியாமல் பொன்.ராதாகிருஷ்ணன், என்னை வெளியூர்காரர் என கூறி வருகிறார். குமரி மாவட்டம் எனது மற்றொரு கண். ரூ.40 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததாக கூறும் பா.ஜனதா வேட்பாளர், அந்த திட்டங்களை முறையாக பட்டியலிட்டு சொல்ல முடியுமா? நான் ஆரம்ப காலத்தில் 70 ரூபாய் சம்பளத்தில் சென்னையில் வேலை செய்தேன். இதனால் ஏழை மக்கள் படும் கஷ்டங்களை நன்கு அறிந்தவன்.

எனது செலவில் பல இடங்களில் 51 குளங்களை தூர்வாரி உள்ளேன். ராகுல்காந்தி அறிவித்திருக்கும் ரூ.72 ஆயிரம் நிதி திட்டம் ஏழை மக்களுக்கு பயன்தரும் திட்டமாகும். காமராஜர் வழி வந்தவன் நான், என்னை பற்றி பேச பா.ஜனதா வேட்பாளருக்கு தகுதி கிடையாது. எனது நோக்கம் குமரி மாவட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவது மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு எச்.வசந்தகுமார் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க மாவட்ட தலைவர் வெற்றிவேல் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நேற்று சாமிதோப்பு வைகுண்ட சாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களின் வேலையில்லா பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும். குமரி மாவட்டத்திலும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Next Story