ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்: நாட்டில் வறுமையை ஒழிக்க ராகுல் காந்தியின் சிறந்த ஆயுதம் தினேஷ் குண்டுராவ் பாராட்டு
ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம், நாட்டில் வறுமையை ஒழிக்க ராகுல் காந்தி கையில் எடுத்துள்ள சிறந்த ஆயுதம் என்று தினேஷ் குண்டுராவ் பாராட்டினார்.
பெங்களூரு,
ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம், நாட்டில் வறுமையை ஒழிக்க ராகுல் காந்தி கையில் எடுத்துள்ள சிறந்த ஆயுதம் என்று தினேஷ் குண்டுராவ் பாராட்டினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (நேற்று முன்தினம்) நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டில் வறுமையை முழுவதுமாக அகற்றும் நோக்கத்தில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்காக ராகுல் காந்தியை பாராட்டுகிறேன். இது ஒரு சிறப்பான திட்டம் ஆகும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம் நாட்டில் வறுமை ஒழியும். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை காங்கிரசால் மட்டுமே அமல்படுத்த முடியும். நாட்டில் வறுமையை ஒழிக்க ராகுல் காந்தி கையில் எடுத்துள்ள சிறந்த ஆயுதம் ஆகும்.
கிராமப்புற வேலை
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, கிராமப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராம பொருளாதாரம் உயா்ந்தது. கிராமங்களில் கூலித்தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்தது.
ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த மோடி அந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டார். உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் குறைந்த விலைக்கு மக்களுக்கு கிடைத்து வருகின்றன.
பொய்களை பேசுகிறார்
இவ்வாறு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பயன் பெறும் வகையில் ஒரு திட்டத்தை கூட அமல்படுத்தவில்லை.
இந்த தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதாக மோடி கூறினார். அதை செய்தாரா?.
பாடம் புகட்டுவார்கள்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை. பொய்களை பேசி மக்களை ஏமாற்ற மோடி முயற்சி செய்கிறார். இந்த மக்கள், மோடிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Related Tags :
Next Story