மொபட்டுகள் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது, உடல் கருகி 2 பேர் பலி - பெண்ணாடம் அருகே பரிதாபம்


மொபட்டுகள் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது,  உடல் கருகி 2 பேர் பலி - பெண்ணாடம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 27 March 2019 5:02 AM IST (Updated: 27 March 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே மொபட்டுகள் நேருக்கு நேர் மோதியதில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஏ.சித்தூரை சேர்ந்தவர் செல்வராசு மகன் நெப்போலியன் (வயது 25). பி.பி.ஏ. படித்த இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்த நெப்போலியன் நேற்று பெண்ணாடம் அடுத்த வடகரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.

இதற்காக நெப்போலியன், அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன் மகன் ராமமூர்த்தி (25) என்பவருடன் வடகரைக்கு சென்றார். அங்கு துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு 2 பேரும் மொபட்டில் பெண்ணாடம் நோக்கி புறப்பட்டனர்.

பெண்ணாடத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை செய்து வந்த நரசிங்கமங்கலத்தை சேர்ந்த தங்கராசு மகன் வேல்முருகன் (40) என்பவர் வேலையை முடித்துவிட்டு, அங்கிருந்து வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். திருமலை அகரம் என்ற இடத்தில் வந்த போது, 2 மொபட்டுகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நெப்போலியன் ஓட்டிச் சென்ற மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த ராமமூர்த்தி சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

மேலும் மோதிக் கொண்ட வேகத்தில் இரண்டு மொபட்டுகளும் தீப்பற்றி எரியத் தொடங்கின. மேலும் அதனை ஓட்டி வந்த நெப்போலியன், வேல்முருகன் ஆகிய 2 பேர் மீதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் 2 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான நெப்போலியன், வேல்முருகன் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story