செஞ்சி ஏழுமலை வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணியினர் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் - தூசி மோகன் எம்.எல்.ஏ. பேச்சு


செஞ்சி ஏழுமலை வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணியினர் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் - தூசி மோகன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 27 March 2019 5:15 AM IST (Updated: 27 March 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் செஞ்சி ஏழுமலை வெற்றிக்கு கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும் என வந்தவாசியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தூசி மோகன் எம்.எல்.ஏ. பேசினார்.

வந்தவாசி,

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை, தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு அறிமுக கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி வந்தவாசி பயணிகள் விடுதி எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சி.சீனிவாசன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் டி.கே.பி.மணி, முன்னாள் தொகுதி செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார், பா.ம.க.மாவட்ட செயலாளர் அன்னை க.சீனுவாசன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஆ.கோபிநாதன், த.மா.கா. மாவட்டத் தலைவர் கே.ஆர்.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எம்.பாஷா வரவேற்றார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க.வேட்பாளர் செஞ்சி சேவல் வி.ஏழுமலையை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட வெற்றி வேட்பாளரான செஞ்சி சேவல் ஏழுமலையை இந்த முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் மகத்தான வெற்றி பெறச் செய்யவேண்டும். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை-முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். நமது கூட்டணி மெகா கூட்டணியாகும். நமது வேட்பாளரின் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பா.ம.க. மாநில துணைத் தலைவர் மு.துரை, தேர்தல் பிரசார அணி செயலாளர் கோ.எதிரொலிமணியன் ஆகியோர் அ.தி.மு.க.வேட்பாளர் வெற்றிக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.ஏ.லோகேஷ்வரன், டி.வி.பச்சையப்பன், ஆர்.அர்ஜூனன், பா.ம.க.வைச் சேர்ந்த நகர செயலாளர் வரதன், பா.ஜ.க. நகர தலைவர் குருலிங்கம், ஒன்றியத் தலைவர் அரிகிருஷ்ணன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர்கள் சீனுவாசன், மகேஷ்வரன், த.மா.க.பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வீரராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெள்ளார் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.தங்கராஜ் நன்றி கூறினார்.


Next Story