காவிரியில் நிறம் மாறும் தண்ணீர்: வறட்சியின் பிடியில் ஈரோடு மாவட்டம்


காவிரியில் நிறம் மாறும் தண்ணீர்: வறட்சியின் பிடியில் ஈரோடு மாவட்டம்
x
தினத்தந்தி 27 March 2019 11:00 PM GMT (Updated: 27 March 2019 2:49 PM GMT)

வறட்சி காரணமாக காவிரியில் தண்ணீர் நிறம் மாறி பச்சையாக உள்ளது. ஈரோடு மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு,

தமிழகம் கடந்த 2016–ம் ஆண்டு வரலாறு காணாத மிகப்பெரிய வறட்சியை அனுபவித்தது. மழை மறைவு பிரதேசமான ஈரோடு மாவட்டம் அந்த வறட்சியின் பிடியில் முழுமையாக சிக்கிக்கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. நெல், வாழை, மஞ்சள், பருத்தி, சோளம், கரும்பு என்று அனைத்து வகை பயிர்களும் வெயிலின் கொடுமையில் காய்ந்து கருகின. விவசாயிகள் நடவுச்செலவு கூட திரும்ப கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எப்போதும் வளமான விவசாய நிலங்களை கொண்ட பகுதியான மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டாரங்கள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டன. விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலமும் ஏற்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு தண்ணீர் பஞ்சத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் மீண்டது. இதில் என்ன சிறப்பு என்றால், ஈரோடு மாவட்ட பகுதிகளில் மழை மிகவும் குறைவாக இருந்தாலும், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதுபோல் கர்நாடக மாநில பகுதிகளில் பெய்த பெரு மழையால் மேட்டூர் அணையும் நிரம்பியது.

ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்யாமலேயே காவிரியும், பவானியும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பு இல்லாமல் கடந்த ஆண்டு கடந்து போனது. ஆனால், இந்த ஆண்டு வறட்சியின் கோரம் கோடைக்கு முன்பே தனது முகத்தை காட்டி இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் நிலங்கள் அனைத்தும் காய்ந்து வருகிறது. விவசாய நிலங்களில் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் அவ்வப்போது திறக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் பாசன பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லாததாக உள்ளது.

ஆனால் வரும் நாட்களில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும், பாதுகாப்பையும் தருமா? என்பது சந்தேகம்தான்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஒரே நீர் ஆதாரம் பவானிசாகர் அணையாகும். 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் 70 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு இருந்தால் மட்டுமே கோடையை சமாளிக்க முடியும் என்ற நிலை உண்டு. இல்லை என்றால் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் வினியோகிக்க முடியும். பொதுவாக ஏப்ரல் மாதத்துக்கு பிறகே அணையின் நீர்மட்டம் குறையத்தொடங்கும்.

ஆனால், இந்த ஆண்டு இப்போதே அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழ் குறைந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 66.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 117 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. ஆனால் அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 1,350 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. வரத்தை விட வெளியேறும் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறையும் என்பதில் சந்தேகமில்லை.

இதுபோல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 64.47 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 39 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கும் நிலமை மோசமாகவே உள்ளது.

காவிரி ஆற்றில் தண்ணீர் விடப்படுவது குறைந்து விட்டதால் காவிரியில் பாறைகள் வெளியே தெரியத்தொடங்கி உள்ளன. கடந்த ஆண்டு பொங்கி பிரவாகம் எடுத்து தண்ணீர் சென்ற காவிரி ஆறு வற்றிப்போய் மணல் பரப்பாக காட்சி அளிக்கிறது. இதைவிட முக்கியமாக காவிரியில் தண்ணீரின் நிறம் மாறத்தொடங்கி இருக்கிறது. தண்ணீர் பச்சை நிறமாக மாறி பாசி படர்ந்து உள்ளது. இந்த தண்ணீர்தான் நீரேற்றம் செய்யப்பட்டு ஈரோடு மாநகர் மக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால் ஈரோடு மாவட்ட மக்கள் தண்ணீருக்கு சிரமப்படும் சூழல் உருவாகும். எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.


Next Story