மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்படும் கனிமொழி எம்.பி. பேச்சு


மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்படும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 28 March 2019 3:15 AM IST (Updated: 28 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்போது தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி சத்யபாமா திருமண மண்டபத்தில் நேற்று தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீப்பெட்டி தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். இதில் 90 சதவீதம் பெண்களே வேலைவாய்ப்பு பெற்றனர். ஆனால் சரக்கு, சேவை வரி விதிப்பின்போது பகுதி எந்திர தீப்பெட்டிக்கும், முழு எந்திர தீப்பெட்டிக்கும் ஒரே அளவாக 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், பகுதி எந்திர தீப்பெட்டி தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதேபோன்று பட்டாசு தொழிலும் நசிந்து வருகிறது. இதனால் அதனை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்போது, சரக்கு, சேவை வரியில் உள்ள குழப்பங்களை நீக்கி, தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்படும். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை கிடைக்க செய்வேன்.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நல்லாட்சி அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

பின்னர் அவர், கோவில்பட்டி காமராஜர் சிலை அருகில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனின் உருவ சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் தி.மு.க. மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தென்காசி தொகுதி பொறுப்பாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கருப்பசாமி, சின்ன பாண்டியன், நகர செயலாளர் கருணாநிதி,

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், துணை தலைவர் திருப்பதி ராஜா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அதியமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலையில் தூத்துக்குடி அருகே பட்டினமருதூர், வேப்பலோடை, முத்துகுமாரபுரம், வேடநத்தம், வள்ளிநாயகபுரம், கே.சண்முகபுரம், சந்திரகிரி, கொல்லம்பரும்பு, மிளகுநத்தம், ஆதனூர், காட்டுநாயக்கன்பட்டி, எப்போதும்வென்றான், தளவாய்புரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், குமரிகுளம், வாலம்பட்டி, கீழ ஈரால் ஆகிய கிராமங்களில் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அவருடன் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் சென்றனர்.

Next Story