கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஷயான் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஷயான் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 28 March 2019 4:45 AM IST (Updated: 28 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷயான் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள சம்சீர் அலி, சதீசன், சந்தோஷ்சாமி, உதயகுமார், ஜித்தின்ராய் ஆகிய 5 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்து ஷயான், மனோஜ், திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகிய 5 பேரை போலீசார் ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். ஷயான், மனோஜ் தவிர மற்ற 8 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை மாவட்ட நீதிபதி வடமலை விசாரித்தார்.

விசாரணையின் போது அரசு வக்கீல் பாலநந்தகுமார் அவர்களை விடுவிக்கக்கூடாது எனவும், தற்போதே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். வக்கீல் சிவக்குமார் 8 பேரை விடுவிக்க முழு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து கோடநாடு வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஷயான், மனோஜ் உள்பட 5 பேர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகிய 3 பேருக்கு ஜாமீன் வழங்கக்கோரிய மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவில் மனோஜ்சாமி ரூ.25 ஆயிரம் மதிப்பு உள்ள பிணையத்திற்கான சொத்து, தனிநபர் ஜாமீனுடன் சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் தினமும் மாலை 5 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்று மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி வடமலை உத்தரவிட்டார். திபு, பிஜின் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவரும் நீதிமன்ற வழக்குகளில் சரிவர ஆஜராகாததால், பிடிவாரண்டு அடிப்படையில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால் ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. 

Next Story