சீல் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தின் பூட்டை உடைத்து டி.வி. திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


சீல் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தின் பூட்டை உடைத்து டி.வி. திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் சீல் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலக பூட்டை உடைத்து டி.வி.யை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந்தேதி முதல் தொடங்கி 26-ந்தேதி முடிவடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாகையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் சுல்தான் அப்பகுதி வழியாக சென்றார். அப்போது எம்.எல்.ஏ. அலுவலக அறை கதவுகளில் சீல் வைக்கப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் வருவாய்த்துறையினர் மற்றும் வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் ஆகியோர் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ. அலுவலகத்தின் உள்ளே இருந்த டி.வி. திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.வி.யை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். சீல் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலக பூட்டை உடைத்து மர்ம நபர்கள் டி.வி.யை திருடி சென்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story