விஷம் கொடுத்து மகனை கொன்று தாய் தற்கொலை மகள் மருத்துவமனையில் அனுமதி


விஷம் கொடுத்து மகனை கொன்று தாய் தற்கொலை மகள் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 29 March 2019 3:45 AM IST (Updated: 29 March 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூர் அருகே விஷம் கொடுத்து மகனை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளாள்.

மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன்(7), மகள் ஜெய வந்தினி(4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

துரைமுருகன், மற்றும் ஜெயவந்தினி ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அபிநயா மிகுந்த சிரமம் அடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அபிநயா, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து தனது மகன் துரைமுருகன், மகள் ஜெயவந்தினி ஆகியோருக்கு குடிப்பதற்காக கொடுத்தார். விஷத்தை குடித்த துரைமுருகனும் ஜெயவந்தினியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதன் பின்னர் அபிநயாவும் விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அபிநயாவும் அவருடைய மகன் துரைமுருகனும் பரிதாபமாக இறந்தனர். ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தாள்.

இந்த நிலையில் அபிநயா வீட்டுக்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு பார்த்த காட்சியால் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்கு அபிநயாவும் அவரது மகன் துரைமுருகனும் பிணமாக கிடப்பதும், ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஜெயவந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுக்கூர் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story