நாகர்கோவிலில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் கல்வீச்சு அரசு பஸ்சையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு


நாகர்கோவிலில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் கல்வீச்சு அரசு பஸ்சையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அரசு பஸ்சையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எப்போதும் 2 அல்லது 3 போலீசார் பணியில் இருப்பார்கள். இதே போல நேற்றும் புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியில் இருந்தனர். அப்போது ஒரு மர்ம நபர் அங்கு வந்தார். அவர் திடீரென கற்களை எடுத்து புறக்காவல் நிலையத்துக்குள் வீசினார். இதில் புறக்காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த போலீசாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இதைப் பார்த்த போலீசார் உடனே விரைந்து சென்று அந்த மர்ம நபரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓடியதோடு ஒரு அரசு பஸ் மீதும் கற்களை வீசினார். இதில் அரசு பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. பஸ்சில் குறைவான பயணிகள் மட்டும் இருந்ததால் கல்வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பறக்கை பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 39) என்பது தெரியவந்தது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சுரேசின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரச்செய்தனர்.

பின்னர் சுரேசை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறு உறவினர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Next Story