தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் 1,900 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், 1,900 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக, தங்களின் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வாங்கியவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
சேலம் மாநகரில் 540 பேர் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். மாநகரில் இதுவரை 500 பேர் தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோல் மாவட்டத்தில் 1,432 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். இவர்களில் 1,400 பேர் தங்களுடைய துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் 1,900 பேர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர் ’ என்றனர்.
Related Tags :
Next Story