பழனியில், சொத்து தகராறில் பயங்கரம், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் - பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்


பழனியில், சொத்து தகராறில் பயங்கரம், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் - பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் சொத்து தகராறில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு, தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

பழனி, 

பழனி ராஜாஜி சாலை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 75). அவருடைய மகன் மணிகண்டன் (42). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் மது அருந்திவிட்டு மாரிமுத்துவிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மாரிமுத்துவிடம் தனது பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு மணிகண்டன் கேட்டார்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனைக்கண்ட உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவர் களை சமாதானப்படுத்தினர். அதன்பிறகு மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து மது அருந்திவிட்டு மீண்டும் மணிகண்டன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தந்தையிடம் அவர் தகராறில் ஈடுபட்டார்.

தற்போது சொத்தை எழுதி தர முடியாது என்று மாரிமுத்து கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தான் வைத்திருந்த அரிவாளால், தந்தை என்றும் பாராமல் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து, சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட கையில் அரிவாளுடன் மணிகண்டன் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து மணிகண்டனை பிடித்த அவர்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். அவர்களிடம் மணிகண்டன் ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டனின் மனைவி வீரம்மாள். இவர்களுக்கு மாசானம் (15) என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீரம்மாள் இறந்து விட்டார்.

அதன்பிறகு மாசானம், கோதைமங்கலத்தில் உள்ள வீரம்மாளின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. சொத்து தகராறில் தந்தையை மகனே, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story