மத்தியில் தி.மு.க. பங்குடன் ஆட்சி அமையும், மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை, ஐ.ஐ.டி. தொடங்கப்படும் - பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


மத்தியில் தி.மு.க. பங்குடன் ஆட்சி அமையும், மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை, ஐ.ஐ.டி. தொடங்கப்படும் - பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 5:00 AM IST (Updated: 29 March 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் தி.மு.க. பங்குடன் ஆட்சி அமையும். மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை மற்றும் ஐ.ஐ.டி. தொடங்கப்படும் என்று மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதுரை வண்டியூரில் நேற்று காலை 10 மணிக்கு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொளுத்தும் வெயிலில் கொள்கை உணர்வோடு திரண்டு இருக்கிறீர்கள். தற்போது நடக்கும் ஆட்சியின் கொடுமையை விட இந்த வெயில் கொடுமை பரவாயில்லை என்று மக்களாகிய நீங்கள் எண்ணுகிறீர்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலம் மோடியின் பாசிச ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். எனவே மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். அது தேர்தல் கதாநாயகன் மட்டுமல்ல. கதாநாயகி. அதில் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடத்தப்படும். கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். இன்று கீழடி பற்றி நாம் பேசுவதற்கு காரணமானவர்களில் முக்கியமானவர் தான் வேட்பாளர் வெங்கடேசன்.

தமிழ் பெருமையை மீட்டெடுக்க பாடுபடும் எழுத்தாளர்கள் வரிசையில் வெங்கடேசனும் இடம் பெற்று இருக்கிறார். மதுரையை மையமாக வைத்து வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் வரும் காரணத்தினால், அண்மையில் கூட மோடி மதுரை வந்து சென்று இருக்கிறார். அப்போது எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். அடிக்கல் நாட்டினால் மட்டும் போதுமா? அதற்கு பணம் ஒதுக்க வேண்டாமா? நான் சொல்கிறேன், இதுவரை பணம் ஒதுக்கவில்லை. பணம் இல்லாமல் எப்படி ஆஸ்பத்திரி உருவாகும்?

மோடி அறிவிப்பு மட்டும் வெளியிட்டுவிட்டு போய் விடுவார். பின்னர் அவர் அதனை மறந்து விடுவார். இந்தியா முழுவதும் இதுபோல பல எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு அறிவிப்பு மட்டும் வெளியிட்டு விட்டு பணம் ஒதுக்கவில்லை. பா.ஜனதா கட்சி ஆளும் உத்தரபிரதேசத்தில் கூட எய்ம்ஸ் அறிவிப்பு வெளியிட்டு ரூ.200 கோடி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை ரூ.98 கோடி தான் தந்து இருக்கிறார். உத்தரபிரதேசத்திற்கே இந்த நிலைமை என்றால் தமிழகத்தில் நிதி தந்து விடவா போகிறார்.

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என்றார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 11 நகரங்களை தேர்வு செய்தார்கள். ஆனால் இதுவரை ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட உருவாகவில்லை. கடந்த தேர்தலின் போது மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார். அப்போது பல வாக்குறுதிகளை வாரி, வாரி வழங்கினார். ஆட்சிக்கு வந்தால் நான் அதை செய்வேன், இதை செய்வேன் என்றார். வானத்தை கிழிப்பேன். வைகுண்டத்தை காட்டுவேன். மணலை கூட கயிறாக திரிப்பேன் என்று பல உறுதி மொழிகளை தந்தார். ஆனால் இதுவரை அவர் எதையும் செய்யவில்லை.

மதுரை, சேலம், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி என எந்த பகுதிக்கு என்ன செய்து இருக்கிறார்? நான் பல முறை கேட்டேன். ஆனால் அவரிடம் இருந்து பதில் இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். ஆனால் தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் சலுகை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், கிராம பகுதிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிமெண்டு சாலைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நல வாரியங்கள் என ஏராளமான திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. தாய் உள்ளத்தோடு கருணாநிதி ஆட்சி செய்தார். ஆனால் தற்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி, பேய் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றார். ஆனால் தற்போது 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்து இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியா வளர்ச்சி அடையும் என்று சொன்னார். ஆனால் இந்தியா தளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போரின் போது இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 5.18 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. வேலை வாய்ப்பு குறித்து மோடியிடம் இளைஞர்கள் கேட்டால், அதற்கு அவர் நீங்களெல்லாம் பக்கோடா விற்கலாமா? என்று கேட்கிறார்.

எடப்பாடியும், மோடியும் ஜாடிக்கு ஏற்ற மூடி, மூடிக்கு ஏற்ற ஜாடியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி கவலையில்லை. அவர்களுக்கு நாற்காலி, பதவி, கொள்ளை அடித்து ஊழல் செய்து கொண்டு இருந்தால் போதும். தற்போது முதல்-அமைச்சர் சூறாவளி பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பயங்கர கூட்டம். அதையெல்லாம் பார்க்கிறேன். வாட்ஸ்-அப்பில் வருகிறது. அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் எடப்பாடி பேசும் போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மிக கேவலமான முறையில் நடத்தப்பட்டு இருக்கிறார்கள். அதனை எண்ணும் போது உள்ளம் கொதிக்கிறது. ரத்த கண்ணீர் வருகிறது.

இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கத்தான் இந்த அரசு துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் 2 மகன்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது இந்த ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது? கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். ஆனால் இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

தர்மபுரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்து இருக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்களுக்கு கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றி இருக்கிறார்கள். உயிரை காக்க வேண்டிய அரசு மருத்துவமனை உயிரை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஆஸ்பத்திரிகள் கொலை கூடாரமாக மாறிவிட்டன.

ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல் அறிவித்து இருக்கிறார். இது ஒரு உன்னதமான திட்டம். இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன். ராகுலின் இந்த அறிவிப்புக்கு மக்களிடையே எழுந்த வரவேற்பை பார்த்து பயந்து போன பா.ஜனதா இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பொய் பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவில் மர்மம் இருக்கிறது. ஆனால் இந்த மர்மத்தை தற்போது நடைபெறும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனால் வெளியே கொண்டு வர முடியாது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்து அதற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம். இது நான், ஜெயலலிதாவை நினைத்து இன்று அழுது கொண்டு இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அளிக்கும் உறுதி மொழி.

தி.மு.க. ஆட்சியின் போது மதுரையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். அதேபோல் மத்தியில் தி.மு.க. பங்குடன் ஆட்சி அமையும். அப்போது மத்திய அரசு அலுவலகத்தில் தமிழில் ஆவணங்கள் இருக்கும். ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்கும். தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் வகையில் சேது சமுத்திர திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். சென்னை- திருச்சி- மதுரை இடையே சதாப்தி ரெயில் விடப்படும்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 3-வது, 4-வது ரெயில் வழித்தடம் ஏற்படுத்தப்படும். மதுரையில் இந்திய தொழில்நுட்ப கழகமான ஐ.ஐ.டி. அமைக்கப்படும். மெட்ரோ ரெயில் விடப்படும். விவசாய கடன் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். நாங்கள் சொன்னதை செய்வோம்.

செய்வதைத்தான் சொல்வோம். உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம். எனவே சு.வெங்கடேசனை பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story