அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை உதயநிதி ஸ்டாலின் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 11:15 PM GMT (Updated: 29 March 2019 5:28 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தர்மபுரி, 

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் டாக்டர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆ.மணி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சி.கிருஷ்ணகுமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து நரிப்பள்ளி, தீர்த்தமலை, அரூர் இடங்களில் தி.மு.க. சார்பில் பிரசார கூட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்தவேனில் நின்றபடி தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி கடந்த தேர்தலில் நான் பிரதமரானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக பண மதிப்பு நடவடிக்கை மூலம் பொதுமக்களை நடுரோட்டிற்கு கொண்டு வந்தார். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடந்த சில ஆண்டுகளில் 10 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதுதான் மோடி அரசின் சாதனை. நீட் தேர்வு காரணமாக ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பறிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மோசமான பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியின் அடிமைகளாக மாறி விட்டனர். அ.தி.மு.க.வை தங்கள் சுய நலனுக்காக அடகு வைத்து விட்டனர். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது.

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சிகள் சந்தர்ப்பவாத அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளனர். அண்மை காலம் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அன்புமணி ராமதாஸ் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

தற்போது அதை மறந்து இந்த கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இதற்கு ஒரே காரணம் பணம் தான். மாற்றம், முன்னேற்றம். அன்புமணி என்று கூறியவர்கள் தற்போது சூட்கேஸ் வாங்கி கொண்டு கொள்கையை மறந்து கூட்டணி அமைத்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட போது தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரியை மாற்றுவேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் அவர் எடுக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் 80 சதவீத வருகை பதிவை வைத்திருப்பது வழக்கம். ஆனால் 40 சதவீத வருகை பதிவுக்கும் குறைவாக உள்ள எம்.பி.க்கள் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் இடம் பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் 14 முறை மட்டுமே அவர் பேசி உள்ளார். அதில் ஒரு முறை கூட தர்மபுரி தொகுதியின் வளர்ச்சிக்காக எந்த கோரிக்கையையும் வைத்து பேசவில்லை. இவர் எப்படி சிறந்த எம்.பி.யாக இருக்க முடியும்?. இதற்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் உரிய பாடம் கற்பிக்க வேண்டும். அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்க வரும்போது கேள்வி கேட்க வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் துணை சபாநாயகரின் மகன்களுக்கு தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு 2 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே இந்த மாவட்ட மக்கள் ஒரே கல்லில் 2 மாங்காய்கள் அடிக்க வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் கதாநாயகன் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற்று உள்ளன. தி.மு.க.வை பொருத்தவரை சொல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். அதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழை, எளிய மக்களின் வறுமையை ஒழிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

அந்த திட்டம் நிச்சயம் நிறைவேறும். மத்தியில் பா.ஜனதா தலைமையிலான பாசிச ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அடிமை ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிக்கு தமிழக மக்கள் முழுமையான ஆதரவு அளித்து புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பிரசாரத்தில் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பார்.இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story