சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம் தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம் தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 29 March 2019 10:45 PM GMT (Updated: 29 March 2019 7:01 PM GMT)

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்கு சேகரித்தார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று காலை அவர் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். பின்னர், அவர் மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களை சந்தித்து தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். மேலும், தி.மு.க. தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

அப்போது, நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் தி.மு.க.வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறும்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, நீட் தேர்வு மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இலவச மின்சாரம் வழங்கப்படும். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அங்கு இருந்த விளையாட்டு வீரர்கள் சிலர் தாங்கள் விளையாடுவதற்கு ஆக்கி மைதானம், கைப்பந்து, கால்பந்து மைதானம் போன்றவை இல்லை என்றும், அதை நீங்கள் நிறைவேற்றி தருவீர்களா? என்று தி.மு.க. வேட்பாளரிடம் கேட்டனர்.

அதற்கு அவர், தான் வெற்றி பெற்றதும், மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று விளையாட்டுத்துறைக்கு தேவையானதை செய்து தருவேன். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்துக்கு மாற்றுவேன் என்று உறுதியளித்தார். மேலும், திறமையான தமிழக விளையாட்டு வீரர்களை இந்திய விளையாட்டுத்துறைக்கு கொண்டு செல்லவும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறினார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது, சேலம் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், குமாரசாமிப்பட்டி பகுதி தி.மு.க. செயலாளர் சாந்தமூர்த்தி, வார்டு செயலாளர் குமரவேல், லட்சுமண பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Next Story