புளியந்தோப்பில் குப்பை வண்டியில் கிடந்த 6 மாத ஆண் சிசு வீசியது யார்? போலீஸ் விசாரணை


புளியந்தோப்பில் குப்பை வண்டியில் கிடந்த 6 மாத ஆண் சிசு வீசியது யார்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 30 March 2019 3:30 AM IST (Updated: 30 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில், குப்பை வண்டியில் இறந்து கிடந்த 6 மாத ஆண் சிசுவை மீட்ட போலீசார், அதை வீசி சென்றது யார்? என விசாரித்து வருகின்றனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 4-வது தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகளை அள்ளி செல்லும் 3 சக்கர வண்டி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை துப்புரவு தொழிலாளி சிவகொழுந்து அந்த குப்பை வண்டியை எடுக்க முயன்றார்.

அப்போது அதில், இறந்த நிலையில் 6 மாத ஆண் சிசு ஒன்று கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சக துப்புரவு தொழிலாளி தினகரனிடம் தெரிவித்தார். அவர், பேசின்பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதில், யாரோ 6 மாத ஆண் சிசுவை பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பை வண்டியில் வீசி இருப்பது தெரிந்தது. அந்த சிசுவை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகாத உறவில் உருவான குழந்தை என்பதால் கரு கலைக்கப்பட்டு குப்பை வண்டியில் வீசினார்களா?, அல்லது குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததா? எனவும், அதை குப்பை வண்டியில் வீசி சென்றது யார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story