மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்: பள்ளி மாணவன் பலி தாய் கண்முன்னே பரிதாபம்
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில், தாய் கண்முன்னே பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கரூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் பாத்திமா பேகம் (வயது 45). இவரது மகன் முகம்மது இப்ராகிம் (14) அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், முகம்மது இப்ராகிம் தனது தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு கரூர் அரசு காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தான். பின்னர் 2 பேரும் மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை முகம்மது இப்ராகிம் ஓட்ட, பின்னால் பாத்திமா பேகம் அமர்ந்திருந்தார். வாங்கல் கடைவீதி பகுதியில் வந்த போது, பின்னால் நாமக்கல் மாவட்டம் ராசிபாளையத்தை சேர்ந்த சின்னுசாமி (50) ஓட்டி வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது. இதில் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி முகம்மது இப்ராகிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
பாத்திமா பேகம் படுகாயம் அடைந்தார். அப்போது அவர், தனது கண் முன்னே மகன் இறந்ததை பார்த்து கதறி துடித்தது காண்போரை கண்கலங்க செய்யும் வகையில் இருந்தது. இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீசார், பாத்திமா பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக மோகனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகம்மது இப்ராகிமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து டிராக்டர் டிரைவர் சின்னுசாமியை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் மோதி 8-ம் வகுப்பு மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story