குற்றசெயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 462 பேர் கைது


குற்றசெயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 462 பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2019 10:45 PM GMT (Updated: 29 March 2019 10:29 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 462 பேர் கைதுசெய்யப்பட்டுஉள்ளனர்.

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான சோதனை உள்ளிட்ட பணிகளில் ஏற்கனவே 3 சுழற்சி அடிப்படையில் தலா 4 பறக்கும்படையினர் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது தேர்தல் நெருங்குவதால் இந்த குழுவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 3 சுழற்சி அடிப்படையில் 36 பறக்கும்படையினர் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதில் 34 வழக்குகள் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 232 பேரில் 103 பேரிடம் இதுவரை குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி ஆவணபத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டால் மீதம் உள்ள காலத்தில் ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் கழிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் படைக்கலன்கள் எனப்படும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கு உரிய அறிவிப்பு கொடுக்கப்பட்டதன் மூலம் அனைவரும் தங்களின் உரிமம் பெற்ற ஆயுதங்களை அருகில் உள்ள காவல்நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் இவை திருப்பி வழங்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிவாரண்டு வழக்குகளை விரைந்து தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுஉள்ளது.

இதன் பயனாக கடந்த சில நாட்களில் மட்டும் 623 பிடிவாரண்டு தலைமறைவு குற்றவாளிகளில் 462 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். மீதம் உள்ளவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதேபோல, குற்ற செயல்களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி சென்றவர்களை பிடிக்க அனைத்துவிமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்துள்ளார்.


Next Story