போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மகன், மகளுடன் தீக்குளிக்க வந்த பெண் - காதல் கணவர் துன்புறுத்துவதாக புகார்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மகன், மகளுடன் தீக்குளிக்க வந்த பெண் - காதல் கணவர் துன்புறுத்துவதாக புகார்
x
தினத்தந்தி 30 March 2019 4:00 AM IST (Updated: 30 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மகன், மகளுடன் தீக்குளிக்க ஒரு பெண் வந்தார். அவருடைய காதல் கணவர் துன்புறுத்துவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன், சிறுமி ஆகியோர் வந்தனர். 2 பெண்களில் ஒருவர் கையில் ஒரு பை இருந்தது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அவர்கள் வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கவனித்தனர். அப்போது அந்த பெண் தான் வைத்திருந்த பையில் இருந்து எதையோ எடுக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது. உடனே அதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பெயர் மகேஸ்வரி (வயது 31). கணவர் பெயர் முத்துப்பாண்டி. தள்ளுவண்டியில் கூழ் விற்பனை செய்கிறார். எங்களுக்கு கோகுல்பிரகாஷ் (6) என்ற மகனும், பிருந்தா (9) என்ற மகளும் உள்ளனர். நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டோம். எரியோடு அருகே உள்ள சவுரியார்பட்டியில் வசிக்கிறோம். கடந்த சில மாதங்களாகவே எனது கணவர் மதுபோதையில் என்னிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குக்கரால் எனது தலையில் தாக்கிவிட்டார். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வேடசந்தூரில் வசிக்கும் எனது தாயார் செல்வியின் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டேன். மேலும் என்னை தாக்கியது குறித்து வேடசந்தூர் போலீசிலும் புகார் அளித்தேன். இந்த நிலையில் எனது தாயின் செல்போன் எண்ணுக்கு சிலர் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நான் எனது குழந்தைகள் மற்றும் தாயுடன் தீக்குளிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தேன். ஆனால் போலீசார் என்னை தடுத்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் வேடசந்தூர் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பெண்ணிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

Next Story