‘இந்தியாவை மீண்டும் ஆளப்போவது மோடி தான்’ பெரியகுளம் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
இந்தியாவை மீண்டும் ஆளப்போவது மோடி தான் என்று பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
தேனி,
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் ஆகியோருக்கு வாக்குசேகரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெரியகுளத்தில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தேனி நாடாளுமன்ற தொகுதி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமாரை எதிர்த்து நிற்கும் அணி பலவீனமானது. அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளரை பற்றி சொல்லவே தேவையில்லை.
எதிர்த்து நிற்கும் வேட்பாளரின் தந்தை ஈ.வி.கே.சம்பத் அற்புதமாக பேசக்கூடியவர். அவரை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றியவர் கருணாநிதி. அதன் பின்னர் சம்பத் தமிழ் தேசிய கட்சியை தொடங்கினார். பின்னர் அவர் செய்த தவறு காங்கிரசில் சேர்ந்தது. அவர் நல்ல பண்பாளர். அவருடைய மகன்தான், ரவீந்திரநாத்குமாரை எதிர்த்து நிற்கிறார். ஆனால் அவர் வெற்றி பெறப் போவது இல்லை.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் கொஞ்ச, நஞ்சமல்ல. தி.மு.க. தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் ஏராளம். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து செய்த துரோகங்களை நீண்ட பட்டியல் போடலாம்.
காமராஜரை காங்கிரஸ் கட்சி எவ்வளவு கேவலப்படுத்தியது. அதனால் ஏற்பட்ட வருத்தத்தில் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. காமராஜரை தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசினார்கள்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 125 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. இந்தியாவை மீண்டும் ஆளப்போவது மோடி தான். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் வழங்கியது காங்கிரஸ் அரசு. வேடிக்கை பார்த்தது தி.மு.க. எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஓட்டு கூட போடக்கூடாது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத்குமாரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story