பஸ் கட்டண உயர்வை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2019 11:30 PM GMT (Updated: 29 March 2019 11:27 PM GMT)

புதுவை பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலாப்பட்டு,

புதுவை காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு புதுவை தவிர பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6,500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதில் கல்வி கட்டண விவரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில படிப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது.

இந்த கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் 2 நாட்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக பஸ் கட்டணம் 2 மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவர்கள் முதலாவது நுழைவுவாயில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பஸ் கட்டணத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோ‌ஷமிட்டனர். பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் அங்கு திரண்டு கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர், மாணவர்கள் தரப்பில் 5 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாணவர்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story