ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு, ரூ.30 லட்சம் மதுபாட்டில்கள் சேதம் - லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் தப்பியது
ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன. லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர், கம்பிபாலம் கால்வாய்கரையோரம் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் ஷட்டர் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால், உள்ளே தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து கடை மேற்பார்வையாளருக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த மேஜை, நாற்காலி மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இந்திரவள்ளி, மாவட்ட உதவி கண்காணிப்பாளர் ஜவகர், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரவில் மர்ம நபர்கள் வைக்கோலை எரித்து கடையின் மேல் பகுதியில் உள்ள சிறிய இடைவெளி வழியாக உள்ளே போட்டுள்ளனர். இதில், கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில் பெட்டிகளும், அவற்றில் இருந்த மதுவும் எரிந்து நாசமானது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் மது விற்ற ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கடையின் உள்ளே ரகசிய இடத்தில் இரும்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த பணம் தப்பியது.
மேலும், மர்ம நபர்கள் திரும்பி செல்லும் போது, டாஸ்மாக் கடையின் அருகில் இருந்த சிறிய பெட்டிக்கடைக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதில் கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story