குமரியில் அதிகாரிகள் சோதனை, அரசு பஸ்சில் கொண்டு வந்த ரூ.52 லட்சம் பறிமுதல் - ஹவாலா பணமா? 2 பேரிடம் விசாரணை


குமரியில் அதிகாரிகள் சோதனை, அரசு பஸ்சில் கொண்டு வந்த ரூ.52 லட்சம் பறிமுதல் - ஹவாலா பணமா? 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 29 March 2019 11:28 PM GMT (Updated: 29 March 2019 11:28 PM GMT)

நாகர்கோவில் அருகே அரசு பஸ்சில் கொண்டு வந்த ரூ.52½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணமா? என்பது குறித்து 2 பேரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க 54 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நிலையான கண்காணிப்பு அதிகாரி சரஸ்வதி தலைமையிலான குழுவினர் நேற்று காலை நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து வந்த ஒரு அரசு பஸ்சை அதிகாரிகள் மறித்து பயணிகளின் உடமைகளை சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பையில் வைத்திருந்தார். இதை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனே அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பயணியை சோதனை செய்தனர். அப்போது அவர் மேலும் ரூ.20 லட்சத்தை துணியில் சுருட்டி தனது இடுப்பில் கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர், மதுரையை சேர்ந்த கனகராஜ் (வயது 53) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல அதே பஸ்சில் வந்த திண்டுக்கலை சேர்ந்த முகமது அனிபா (41) என்பவரிடம் இருந்து ரூ.30 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவரும் பணத்தை இடுப்பில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். ஆனால் 2 பேரும் பணத்தை யாரிடம் இருந்து வாங்கி வந்தார்கள்? யாரிடம் ஒப்படைப்பதற்காக அந்த பணம் கொண்டு வரப்பட்டது? என்ற விவரம் தெரியவில்லை. ஒருவேளை இது ஹவாலா பணமாக இருக்குமோ? என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

பறக்கும் படை சோதனையில் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் சிக்கினால் இதுதொடர்பான விசாரணையை வருமான வரித்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பதால் கனகராஜ் மற்றும் முகமது அனிபா ஆகிய 2 பேரும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் நாகர்கோவிலில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட கண்காணிப்பாளர் ஞானதாஸ் தலைமையிலான அதிகாரிகள் தேரேகால்புதூரில் ஒரு ஆம்னி பஸ்சை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த பஸ்சில் வந்த செண்பகராமன்புதூரை சேர்ந்த கிஷோர்குமார் (39) என்பவர் ரூ.5 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை கிஷோர்குமார் தன் தாயாரின் மருத்துவ செலவுக்காக சென்னையில் இருந்து கொண்டுவந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் பணத்தை கொண்டு வருவதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதைத் தொடர்ந்து அந்த பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

திருவட்டார் அருகே புலியிறங்கி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி தாஜ் நிஷா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.28 லட்சத்து 66 ஆயிரத்து 855 இருந்தது. காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்திய போது, தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து வங்கிக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுபோல், நிலையான கண்காணிப்பு குழுவினர் மேக்காமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது, ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 500 இருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் கல்குவாரி உரிமையாளர் என்பது தெரிய வந்தது. பணத்திற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விவசாயத்துறை உதவி அதிகாரி ஜோசப் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா டிக்கோ மற்றும் அதிகாரிகள் கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரத்து 910 இருந்தது. காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்றும், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குமரி மாவட்டத்தில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு நேற்று காலை வரை ஒரு கோடியே 82 லட்சத்து 97 ஆயிரத்து 701 பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 327 கிராம் தங்கம், 1300 கிராம் வெள்ளி ஆகியவையும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

Next Story