மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி: 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்கள்- உள்ளூர் விவசாயிகள் வாக்குவாதம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பரபரப்பு


மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி: 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்கள்- உள்ளூர் விவசாயிகள் வாக்குவாதம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 31 March 2019 4:45 AM IST (Updated: 30 March 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்களுக்கும், உள்ளூர் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொம்மிடி,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க நிலம் அளவீடு செய்த போது மரணம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி கிராமத்தில் அஞ்சலி செலுத்த 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்கள் முடிவு செய்தனர். அதிகாரப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கோம்பூர் பழனியப்பன் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அங்கு திரண்டனர். இதையறிந்த உள்ளூர் விவசாயிகள் பசுமை சாலை எதிர்ப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்கள் அ.பள்ளிப்பள்ளி போலீஸ் நிலையம் பின்புறம் கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்தநிலையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலையில் இருந்து வந்த விவசாயிகளை தர்மபுரி மாவட்ட எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அ.பள்ளிப்பட்டி போலீசார் விவசாயிகளை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் அவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் அருண் கூறுகையில், இன்னும் 3 நாட்களில் 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்திற்கான அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அறிவிக்க வேண்டும். இல்லையெனில் எங்களது அமைப்பின் சார்பில் ஆளும் கட்சியினருக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

உள்ளூர் விவசாயிகள் கூறுகையில், சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோட்டில் இடைக்கால தடையை பெற்றவர் அன்புமணி ராமதாஸ். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததால் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வந்ததால் தடுத்தோம் என்று தெரிவித்தனர்.

Next Story