தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.70 லட்சம் செலவு செய்யலாம் தேர்தல் அதிகாரி சாந்தா தகவல்


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.70 லட்சம் செலவு செய்யலாம் தேர்தல் அதிகாரி சாந்தா தகவல்
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதியின் பொது பார்வையாளர் மஞ்சுநாத்பஜன்ட்ரி முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு ரூ.70 லட்சம் மட்டும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளரும் செலவு செய்யலாம். வேட்பாளரால் செய்யப்படும் தேர்தல் செலவு சட்டத்திற்கு உட்பட்ட செலவு மற்றும் சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பான செலவு என இரண்டு வகையாக கணக்கிடப்படும். பொதுக்கூட்டம், ஊர்வலம், சுவரொட்டி, விளம்பர பதாகைகள், செய்தித்தாள் விளம்பர செலவுகள், டி.வி. மூலம் விளம்பர செலவுகள் போன்றவையும், வாகனங்களை பயன்படுத்துதல் ஆகியவையும் சட்டத்திற்கு உட்பட்ட தேர்தல் செலவினங்களாகும்.

வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்தல், மதுபானம் வினியோகித்தல், இதர விதங்களில் வாக்காளர்களை கவர்வதற்காக அளிக்கப்படும் பரிசுப்பொருட்கள் ஆகியன சட்டத்திற்கு புறம்பான தேர்தல் செலவினங்களாகும். இந்த மாதிரி செலவுகள் மீது இந்திய தண்டனை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும். ஒரு வேட்பாளருக்கு சாதகமாக அவர்களின் சாதனைகள் பற்றியோ, அவர் நற்பண்பு கொண்டவர், மக்களுக்கு பல நன்மைகளை செய்வார் என்றோ அல்லது இதர விவரங்கள் பற்றியோ செய்தித்தாள்களில் செய்திபோல் வெளியிடப்படுகின்ற விவரங்களும் வேட்பாளர் செலவு செய்து விளம்பரம் கொடுத்ததாகவே கணக்கிடப்படும். மேற்படி, செலவினங்கள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படுவதுடன் போலீஸ் நிலையம் அல்லது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்படும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒவ்வொரு வேட்பாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ தேர்தல் செலவினம் தொடர்பாக ஒரு கணக்கு பராமரிக்க வேண்டும். இந்த கணக்கு சரியானதாகவும், உண்மைத்தன்மையை பிரதி பலிப்பதாகவும் இருக்கவேண்டும். மனுதாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரை இக்கணக்கு எழுதப்பட வேண்டும்.

தேர்தல் செலவு செய்ய தேவையான தொகையினை இந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, தேர்தல் செலவினங்கள் அனைத்தும் இந்த வங்கி கணக்கில் இருந்துதான் மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கி கணக்கு வேட்பாளரின் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது ஏஜெண்டு ஆகியோர் பெயரில் கூட்டாகவோ ஆரம்பிக்கலாம். மேலும், வேட்பாளர் தாமோ அல்லது தம்மால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டு மூலமாகவோ அல்லது வேறு நபர் மூலமாக உரிய அங்கீகார கடிதத்துடன் தேர்தல் கணக்கினை தேர்தல் கணக்கு பார்வையாளர் முன்பாக குறைந்தபட்சம் மூன்று முறை ஆய்விற்கு தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story