அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 ஆண்டுக்கு பிறகு கரும்பு அரவை தொடங்கியது விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 ஆண்டுக்கு பிறகு கரும்பு அரவை தொடங்கியது விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 ஆண்டுக்கு பிறகு கரும்பு அரவை நேற்று தொடங்கியது. இதனால் கரும்பு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாகக்கொண்டு இயங்கி வருகிறது.

ஆலை அரவைக்கு தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பழனி, பல்லடம் ஆகிய தாலுகாக்களில் உள்ள கரும்பு விவசாயிகளிடம் இருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய இடங்களில் உள்ள கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

மழை இல்லாதது, கடும் வறட்சி ஆகியவற்றால் இந்த ஆலைக்கு தேவையான கரும்பு கிடைக்காததால் கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய 2 ஆண்டுகளாக இந்த ஆலையில் கரும்பு அரவை நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் இந்த ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகள் ஆர்வத்துடன் கரும்பு நடவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2018-2019-ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்தில் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக ஆலையின் களப்பணியாளர்கள், ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளை சந்தித்து கரும்பு பதிவு செய்தனர். இந்த ஆண்டு (2018-2019) அரவைப்பருவத்திற்கு 2 ஆயிரத்து 790 ஏக்கர் கன்னி கரும்பும், 650 ஏக்கர் கட்டைக்கரும்பும் என மொத்தம் 3 ஆயிரத்து 440 ஏக்கர் கரும்பு பதிவு (ஒப்பந்தம்) ஆகியுள்ளது. இதன் மூலம் ஆலை அரவைக்கு 1 லட்சத்து 37 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான (2018-2019) கரும்பு அரவைக்காக ஆலையின் கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா கடந்த 20-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆலையில் கரும்பு அரவை நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு ஆலையின் மேலாண்மை இயக்குனர் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆலையின் அலுவலக மேலாளர் நடராஜன், கரும்பு பெருக்கு அலுவலர் சுப்புராஜ், துணை தலைமைப்பொறியாளர் (பொறுப்பு) ராமமூர்த்தி, துணைத்தலைமை ரசாயனர் (பொறுப்பு) வேணுகோபால் மற்றும் முன்னோடி கரும்பு விவசாயிகள் , ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலையில் 2 ஆண்டுகளாக அரவை நடைபெறாமலிருந்த நிலையில் இந்த ஆண்டு கரும்பு அரவைத்தொடங்கியதால் கரும்பு விவசாயிகளும், ஆலைத்தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story