ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் ரூ.86 ஆயிரம் திருட்டு


ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் ரூ.86 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 31 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-31T21:46:06+05:30)

பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து, ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் ரூ.86 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், காவேரி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 76). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், நேற்று முன்தினம் விருகம்பாக்கம் அருணாச்சலம் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், செல்வராஜியிடம் தான் பணம் எடுத்து தருவதாக கூறினார். அவரும் சம்மதிக்கவே, அந்த வாலிபர், செல்வராஜியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை நுழைத்து, ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டு போட்டு பார்த்தார்.

ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று வருவதாக கூறி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் செல்வராஜ் செல்போனுக்கு அடுத்தடுத்து குறுந்தகவல்கள் வந்தன. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.86 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போதுதான் அவர், தனது கையில் இருப்பது போலி ஏ.டி.எம். கார்டு என்பது அவருக்கு தெரிந்தது.

ஏ.டி.எம். மையத்தில் செல்வராஜ்க்கு பணம் எடுத்து கொடுப்பதாக கூறிய வாலிபர், அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து, ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்று கூறி போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு அவரது உண்மையான ஏ.டி.எம். கார்டை வைத்துகொண்ட வாலிபர் அதை பயன்படுத்தி அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் செல்வராஜின் வங்கி கணக்கில் இருந்து ரூ.86 ஆயிரத்தை திருடியது தெரிந்தது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் செல்வராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம வாலிபரின் உருவத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

Next Story