காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு எதிர்ப்பு அலை வீசி வருகிறது - பரங்கிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பாலகிருஷ்ணன் பேச்சு


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு எதிர்ப்பு அலை வீசி வருகிறது - பரங்கிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பாலகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2019 10:15 PM GMT (Updated: 2019-04-01T01:42:57+05:30)

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு எதிர்ப்பு அலை வீசி வருகிறது என்று பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசினார்.

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மாலை பரங்கிப்பேட்டை வண்டிக்கார தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய தேர்தல். முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். தேர்தல் நடக்கும் போது முன்னாள் அமைச்சர் வீட்டில் எப்படி சோதனை நடத்த முடியும். இந்த சோதனையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் நடத்த முடியுமா?. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரோடு ஆலோசனை செய்து, தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்துவோம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு எதிர்ப்பு அலை வீசி வருகிறது. மோடி மீண்டும் பிரதமராக வந்தால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் கிராமங்களே அழிந்து விடும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும். மோடி ஆட்சி, மக்களால் தூக்கி எறியப்படும். மோடி வந்தால் இந்தியாவே இருக்காது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து திருமாவளவன் பேசியதாவது:-

சிதம்பரம் தொகுதி மக்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். நாடாளுமன்றத்தில் போராடவே, நான் போட்டியிடுகிறேன். தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றும் மோடியை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. தமிழகத்திற்கு மோடி அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. கஜா புயலில் கூட தமிழக அரசு கேட்ட நிதி உதவியை மோடி அரசு தரவில்லை. மோடியால் இந்த நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். மோடி அரசு தூக்கியெறிந்து, ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story