மண்டியா தேர்தல் அதிகாரியை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் சுயேச்சை வேட்பாளர் சுமலதா வலியுறுத்தல்


மண்டியா தேர்தல் அதிகாரியை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் சுயேச்சை வேட்பாளர் சுமலதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 March 2019 11:00 PM GMT (Updated: 2019-04-01T02:01:08+05:30)

மண்டியா தேர்தல் அதிகாரியை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் சுமலதா வலியுறுத்தினார்.

பெங்களூரு, 

மண்டியா தேர்தல் அதிகாரியை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் சுமலதா வலியுறுத்தினார்.

மண்டியா தொகுதியில் போட்டியிட்டுள்ள சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா மண்டியாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆட்சேபனை

மண்டியாவில் நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன். இதுவரை சில கசப்பான நிகழ்வுகள் நடந்துவிட்டன. இது எனக்கு அதிருப்தியை தந்துள்ளது. எனக்கு சரியான நீதி கிடைக்கவில்லை.

நிகில் குமாரசாமி மனுவில் சில குறைகள் இருப்பதாக எனது ஏஜெண்டு ஆட்சேபனை தெரிவித்தார். இதுகுறித்து வீடியோ காட்சி எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் சில காட்சிகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்டோம். அதற்கு அவர், வீடியோ எடுத்த நபர் ஏதோ செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி கூறினார். நான் மண்டியாவில் மனு தாக்கல் செய்த பிறகு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அதில் அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இதனால், மண்டியாவில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர். ஆனால் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமி மனு தாக்கல் செய்துவிட்டு பிரசார கூட்டத்தில் பேசினார்.

தடையின்றி மின்சாரம்

அன்றைய தினம் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடிதம் வழங்கினார். இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் செய்தேன்.

அதற்கு அவர், முதல்-மந்திரியாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் அவரை அரசியல்வாதி என்றே நாங்கள் கருதுகிறோம். அதனால் போலீஸ் சூப்பிரண்டு அவ்வாறு கடிதம் எழுதியது தவறு, அதுபற்றி விசாரித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

கேபிள் இணைப்பு

இன்று (நேற்று) நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது கூட மண்டியாவில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. முதல்-மந்திரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக எங்களுக்கு தோன்றுகிறது.

நிகில் குமாரசாமியின் மனுவில் குறை இருப்பதாக நாங்கள் கூறினோம். மனுக்கள் பரிசீலனையின்போது ஆட்சேபனை தெரிவிக்க எங்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கவில்லை. தேர்தல் அதிகாரி தன்னிச்சையாக செயல்பட்டு நிகில் குமாரசாமியின் மனுவை அங்கீகரித்ததாக அறிவித்தார்.

பணியிட மாற்றம்

தேர்தல் அதிகாரி நேர்மையான முறையில் செயல்படவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் மண்டியா மாவட்ட தேர்தல் அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரியை இங்கு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு சுமலதா கூறினார்.

Next Story