விழுப்புரம் மாவட்டத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
விழுப்புரம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 18-ந் தேதிநடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 4,043 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,043 வாக்கு எண்ணிக்கை எந்திரம் மற்றும் 4,172 வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆகவே தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது குறித்து 11 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடந்தது.
அந்த வகையில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. 2-ம் கட்டமாக நடந்த இந்த முகாமில் வாக்குச்சாவடி அலுவலர்களின் கடமை, தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும், வாக்கு எந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story