மொபட் மீது வேன் மோதி விபத்து, மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது


மொபட் மீது வேன் மோதி விபத்து, மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 31 March 2019 9:45 PM GMT (Updated: 2019-04-01T05:05:04+05:30)

கிணத்துக்கடவில் மொபட் மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கிணத்துக்கடவு, 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 49). திருப்பூர் மாவட்டம் உடுமலை கணபதிபாளையத்தை சேர்ந்த மாசிலாமணி (35). கிணத்துக்கடவு கொண்டம்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன் (45). கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (55). இவர்கள் 4 பேரும் தொழிலாளர்கள்.

இவர்கள் 4 பேரும் ஒரே மொபட்டில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டிக்கு சென்றனர்.

மொபட்டை மாசிலாமணி ஓட்டினார். கொண்டம்பட்டி சாலையில் உள்ள தனியார்நிறுவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த வேன் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாரிச்சாமி, ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் ஆறுச்சாமி, மாசிலாமணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுச்சாமி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் நெகமம் அருகே உள்ள சேரிபாளையத்தை சேர்ந்த மகேஷ்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story